Sunday, November 27, 2005

எங்கே தொலைந்து போனேன் நான்?

எங்கே தொலைந்து போனேன் நான்?எங்கே? என்னை எனக்கே அடையாளம் தெரியாமல் எங்கே தொலைந்து போனேன் நான்? என் கனவுகள் எனக்கே அந்நியமாய் புதிராய் மாற எங்கே தொலைந்து போனேன் நான்? சந்தியாக்காலச் சூரியனைக் கண்டும் காணாமல், கணிப்பொறியின் அடிமையாய் எங்கே தொலைந்து போனேன் நான்?பூக்களும் கண்ணுக்குத் தெரியாமல், இயற்கையை நின்று ரசிக்காமல் ஏதோ ஒரு ஜந்துவைப் போல் என்னிலிருந்து வெளியே தனியே நிற்கிறேன். மொட்டை மாடியின் முழுநிலவு வெளிச்சத்தில் மெல்லிசை இதமாய்த் தவழ பாரதி ரசித்த நாட்கள், தினம் ஒரு புத்தகம், அதைப் பற்றி நாள் முழுதும் நன்பர்களுடன் வாக்குவாதம், அன்று காலைப் படித்த கவிதையைப் பற்றிக் கல்லூரி மரத்தடியில் சிந்தனை - இன்று எனக்கு ஞாபங்கள் மட்டுமாய் மனதின் எங்கோ ஒரு ஒரு மூலையில் முடங்கிப் போய்...இவையெல்லாம் என்னுள்ளே கேள்விகளாய், குழப்பங்களாய் வெடிக்க நானே என்னை ஒரு மூன்றாம் மனுக்ஷ¢யாய் பார்க்கிறேன்...எங்கே தொலைந்து போனேன் நான்?

கேள்விகள்...கூர் அம்புகளாய் ஆழமாய் என்னைத் துளைக்க என்னுள்ளே ஓர் வெளிச்சம். என் சுயம் என்னுள்ளே ஒவ்வொறு நொடியும் புதிதாய் பிறந்து கொண்டிருக்கிறது. என் கனவுகள் எனக்கு அந்நியமாயிருக்கவில்லை இப்போது. எனக்காக மெறுகேறிக் கொண்டிருக்கிறது - என்னால். மேகத்தைத் துளைத்து மண் மீது மோதும் சூரியக் கிரணங்களைப் போல் என் கேள்விகளைக் கிழித்து என் கனவுகள் மெய்ப்பட இன்று புதிதாய்ப் பிறக்கிறேன்.

Tuesday, August 30, 2005

காபியும் நானும்.....

காபியும் நானும் உயிரும் மெய்யும் போல. நான் மெய்யென்றால் காபி என் உயிர். காலையில் ஒரு டோஸ் திக்கான கள்ளிச்சொட்டு காபி, மதியம் ஒரு ரெண்டாங்காபி, மாலையில் மறுபடியும் ஒரு லோட்டா நிறைய காபி... இப்படி வேளா வேளைக்கு காபி வேண்டும் எனக்கு. என் அம்மா எனக்கும் மேலே. அம்மாவிற்கு வேளாவேளைக்கு காபி இல்லை என்றால் நாங்கள் காலி.
மதுரையில் எனக்கும் அவளுக்கும் காபி கலந்து கலந்து ஓய்ந்து போவாள் என் அம்மா. வருவோர் போவோர் எல்லோரிடமிருந்தும் திட்டு கிடைக்கும் எனக்கு. "என்னத்துக்கு இப்படி காபிய கட்டிண்டு அழரியோ? காபில என்ன இருக்குடீ அப்பிடி??" இப்படி ஆரம்பிக்கும் திட்டு சிந்துபாத் கதை போல நீளும். எங்கள் தெரு மாமிகளிடம் நாங்கள் இருவரும் வாங்கும் திட்டு பிரசித்தம். ஊர் உலகத்துல திருட்டு மாங்காய் அடிப்பார்கள் என்றால் நாங்கள் இருவரும் திருட்டு காபி அடிப்போம். அப்படி ஒரு காபி பயித்தியம் நாங்கள் இருவரும்.
இன்று Google news இல் காபியில் antioxidants அளவு காய்கறி பழங்களைவிடவும் அதிகம் என்று படித்தவுடன் எனக்கு அவ்வளவு சந்தோஷம். எங்கள் வயிற்றில் பாலை..இல்லை இல்லை காபியை வாற்றால் போல் இருந்தது. இருக்காதா பின்ன?? இனி நான் காபிக்கு கணக்கு பார்க்க வேண்டாமே!!!

Thursday, August 11, 2005

பார(தீ)!!!!!!!!!!!!!!!!!!!

எறக்குறய பத்து வருடங்களிற்குப் பிறகு தமிழில் எழுதுகிறேன். பிழையிருப்பின்
பொருத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இரண்டு மூன்று வயதில் தமிழ் எழுதுக்கள் கற்றுக்கொடுத்த அம்மா, எனக்கு முதலில்
அறிமுகப்படுதியது பாரதியை. அவர் சொல்லிக் கொடுத்தபடி "அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே" மேடையேறி பாடியது இன்றும் என் மனதில் நிற்கிறது. அதற்கு
பரிசாகப் பெற்றது பாரதியார் கவிதைகள் புத்தகம். பொழுது போகாத வேளைகளில்,
அதை படிக்க ஆரம்பித்த நான், மிக விரைவில் அவரின் எழுத்துக்கு அடிமை ஆனேன்.
என்ன அழகான தூய்மையான சிந்தனை. என்ன வேகம் அவர் வார்த்தைகளில். என்ன
தீர்கதரிசனம் அவர் பாக்களில். படிப்பவர் கண்களில் சில நேரம் நீர்துளி, சில நேரம்
தீப்பொறி...

"அக்கினிக் குஞ்ஞொன்று கண்டேன்
அதை ஆங்கினோர் பொந்தினில் வைத்தேன்.
வெந்து தணிந்தன காடு
தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்"

நான்கே வரி. ஆனால் எத்தனை உண்மை அதனுள். எத்தனை வேகம். மெய்சிலிற்கிறது.
இக்கவிதை படித்தவுடன் எனக்கு கம்ப இராமாயணத்தில் ஒரு இடம் ஞாபகம் வருகிறது.
அனுமார் அசோகவனத்தில் சீதையை கண்டுவிட்டு இராமரிடத்தில் சேதி சொல்ல வரும்
இடம். இராமருக்கு கவலை வேண்டாமென்று இரண்டே வார்த்தையில் சேதி சொல்லுவார் -
"கண்டேன் சீதையை". இங்கு கவனித்தால் கம்பர் 'கண்டேன்' சொல்லை சீதைக்கு முன்
புகுத்தியிருப்பார். இரண்டே வார்தையில் எவ்வளவு வண்மை.

இன்னும் சில...

"நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடீ சிவசக்தி எனை சுடர்மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்"

"உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்"

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்"
என்று எழுதிவிட்டு அதே பாவில்
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்"

என்றும் பாடுகிறார்.
இப்படி ஏராளம்...இது பாரதி பற்றி எனது முதல் தொகுப்பு...நான் படித்த பல பாடல்கள்
நினைவில் சரியாக இல்லை இப்போது.... சற்று நாளாகும். என் பாரதி தொகுப்பு இன்னும்
வளரும்.