Sunday, November 27, 2005

எங்கே தொலைந்து போனேன் நான்?

எங்கே தொலைந்து போனேன் நான்?எங்கே? என்னை எனக்கே அடையாளம் தெரியாமல் எங்கே தொலைந்து போனேன் நான்? என் கனவுகள் எனக்கே அந்நியமாய் புதிராய் மாற எங்கே தொலைந்து போனேன் நான்? சந்தியாக்காலச் சூரியனைக் கண்டும் காணாமல், கணிப்பொறியின் அடிமையாய் எங்கே தொலைந்து போனேன் நான்?பூக்களும் கண்ணுக்குத் தெரியாமல், இயற்கையை நின்று ரசிக்காமல் ஏதோ ஒரு ஜந்துவைப் போல் என்னிலிருந்து வெளியே தனியே நிற்கிறேன். மொட்டை மாடியின் முழுநிலவு வெளிச்சத்தில் மெல்லிசை இதமாய்த் தவழ பாரதி ரசித்த நாட்கள், தினம் ஒரு புத்தகம், அதைப் பற்றி நாள் முழுதும் நன்பர்களுடன் வாக்குவாதம், அன்று காலைப் படித்த கவிதையைப் பற்றிக் கல்லூரி மரத்தடியில் சிந்தனை - இன்று எனக்கு ஞாபங்கள் மட்டுமாய் மனதின் எங்கோ ஒரு ஒரு மூலையில் முடங்கிப் போய்...இவையெல்லாம் என்னுள்ளே கேள்விகளாய், குழப்பங்களாய் வெடிக்க நானே என்னை ஒரு மூன்றாம் மனுக்ஷ¢யாய் பார்க்கிறேன்...எங்கே தொலைந்து போனேன் நான்?

கேள்விகள்...கூர் அம்புகளாய் ஆழமாய் என்னைத் துளைக்க என்னுள்ளே ஓர் வெளிச்சம். என் சுயம் என்னுள்ளே ஒவ்வொறு நொடியும் புதிதாய் பிறந்து கொண்டிருக்கிறது. என் கனவுகள் எனக்கு அந்நியமாயிருக்கவில்லை இப்போது. எனக்காக மெறுகேறிக் கொண்டிருக்கிறது - என்னால். மேகத்தைத் துளைத்து மண் மீது மோதும் சூரியக் கிரணங்களைப் போல் என் கேள்விகளைக் கிழித்து என் கனவுகள் மெய்ப்பட இன்று புதிதாய்ப் பிறக்கிறேன்.